ஒரு கல் ஒரு கண்ணாடி - OK OK

சிவா மனசில சக்தி (SMS), பாஸ் என்கிற பாஸ்கரன் (BOSS) என்ற காமெடி கலட்டா வெற்றிகளை கொடுத்த எம்.ராஜேஷ் அடுத்த படம் இந்த ஒரு கல் ஒரு கண்ணாடி (OK OK)

எளிமையான கதையை தனது திறமையான காமெடி கலந்த காட்சியமைப்புகளால் கலகலப்பாக படத்தை கொடுத்துள்ள இயக்குனர் ராஜேஷை மனதார பாராட்டலாம்.

உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட் எடுத்திருக்கிற முதல் வெற்றிப் படம் என்ற பெருமையை இந்த ஒரு கல் ஒரு கண்ணாடி-க்குத் தரலாம்.

கதைக்காக மண்டையைப் பிய்த்துக் கொண்டு பைத்தியமாகித் திரியும் கோடம்பாக்கத்தில், அதற்காக எந்த சிரசாசனமும் செய்யாமல் எளிமையான கதையை ஒரு இந்திய அஞ்சல் அட்டையில் எழுதி அதில் திகட்டத் திகட்ட காமெடி கலந்த காட்சியமைப்புகளால் கலகலப்பாக படத்தை கொடுத்துள்ளர் 'காமெடி ஸ்பெஷலிஸ்ட்' இயக்குநர் எம்.ராஜேஷ்.

எனக்கு திருமணம் ஆனபிறகு பார்த்த படம் என்பதால் இந்த படம் என்றும் மறக்க முடியாத படமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.


படத்தோட கதை என்னனா ...

அழகான பெண்ணைக் கண்டதும் காதல், அதற்கு நண்பனின் உதவி, காதலில் பிரிவு, இறுதியில் ஒரு புதிய ஹீரோ உதவியுடன் கூடல் என்ற ராஜேஷ் பாணி சிம்பிள் கதை. ஆனால் ஒரு இடத்தில் கூட, அடுத்த சீன் என்ன என்று ‘பாஸ்ட் பார்வர்டு’ கேட்காத அளவுக்கு, ஒவ்வொரு காட்சியையும் அனுபவித்து ரசிக்க வைத்துள்ளார் இயக்குநர் ராஜேஷ்!

இரண்டரை மணி நேரம் எப்படிப் போனதென்றே தெரியாத வேகமும் சுவாரஸ்யமும் கொண்ட திரைக்கதையும், கலகலப்பான வசனங்களும்தான் இந்தப் படத்தின் முதுகெலும்பு.


New Face : உதயநிதி ஸ்டாலின்

ஹீரோ என்ற வகையில், இன்றைய அலட்டல் பார்ட்டிகளுக்கு உதயநிதி ஸ்டாலின் 200 மடங்கு பெட்டர்!

மிக சாதாரணமாக அறிமுகமாகி, காமெடியனால் வாறப்படும் அளவுக்கு இயல்பான நாயகனாக உதயநிதி மனதைக் கவர்கிறார். முதல் படத்துக்கே உரிய சின்னச் சின்ன தயக்கங்கள் அவரிடம் இருந்தாலும், அதுவே அவரை எதார்த்த நாயகனாகக் காட்ட உதவுகிறது. தனக்கு அந்நியமான நடனத்தைக் கூட முடிந்தவரை கெடுக்காமல் ஆடியிருக்கிறார்.

ஹன்ஸிகாவுடனான காதல் காட்சிகளிலும் இயல்பான நெருக்கத்தைக் காட்டி, தன்னை ஒரு வெற்றிகரமான தமிழ் நாயகனாக பதிவு செய்திருக்கிறார் உதயநிதி. வெல்கம்!

ரெஸ்டாரென்ட் முன்பு ஒரு குத்து ஆட்டம் போடுவாரு பாருங்க..... தியேடரே அதிருது.... ஒரே கைத்தட்டு தான் போங்க....!

Real Hero : சந்தானம்

பார்த்தசாரதியாக வரும் சந்தானம் இவருடன் இணைந்து நடித்திருக்கும் லூட்டியே இப்படத்தின் பியூட்டி எனலாம். படம் முழுக்க வரும் சந்தானம் இப்படத்தின் மற்றொரு ஹீரோ என்றே சொல்லலாம். இப்படத்தில் இவரது டயலாக் டெலிவரி மட்டுமின்றி, பாடி லாங்வேஜ் இப்படத்தில் முதன் முதலாக பார்க்க முடிகிறது. அது காமெடி காட்சிகளுக்கு பலம் சேர்க்கிறது.

மனிதர் திரையில் அசத்தலாக அறிமுகமாகும்போது ஆரம்பிக்கும் சிரிப்பலை, கடைசி வரை நிற்காமல் தொடர்கிறது. அவரைப் பொறுத்தவரை இன்னும் இரண்டு டஜன் படங்களுக்குத் தாங்கும் இந்த OK OK.



Kushboo : ஹன்சிகா மோத்வானி

மீராவாக நடித்துள்ள நாயகி ஹன்சிகா மோத்வானி, ஒவ்வொரு காட்சியிலும் காட்டும் முக பாவனைகள், இளவட்டங்களின் உள்ளங்களை கொள்ளை கொள்ளும் எனலாம். இப்படத்தில் 'சின்ன குஷ்பு' என்று பாராட்டும் காட்சிகள் இவருக்கு படு பொருத்தம்.

நாயகனை வெறுக்கும் போதும் பிறகு காதலை ஒப்புக் கொள்ளும் போதும் நடிப்பில் அழுத்தம். முந்தைய மூன்று படங்களை விட, இதில் ஹன்ஸிகா எவ்வளவோ பரவாயில்லை.

பெரிதாக நடிக்கத் தேவையில்லாத பாத்திரம் என்றாலும், தன் தோற்றம் மற்றும் உடல்மொழியால் மனதைக் கவர்கிறார். இந்த ஆண்டு டாப் இடத்தைப் பிடிக்க இந்தப் படம் ஹன்ஸிகாவுக்கு உதவும்.


Special : ரசித்த இன்னும் பிற நடிகர்கள்

உதயநிதியின் அம்மாவாக வரும் சரண்யா கலக்கியிருக்கிறார். வழக்கமாக கண்ணீர் சிந்தும் அவர், இந்த பார்வையாளர்கள் கண்ணில் நீர்வரும் அளவு கலகலக்க வைக்கிறார். நல்ல மாறுதல். அவர் கணவராக வரும் அழகம் பெருமாளும் OK.

ஷாயாஜி ஷிண்டேவை காமெடி போலீசாக்கிவிட்டார்கள். ரசிக்க முடிகிறது

ராஜேஷ் படத்துக்கே உரிய கவுரவ நடிகர்களாக ஆர்யா, சினேகா மற்றும் ஆன்ட்ரியா. மூவரின் வருகையுமே படத்தை இன்னும் கலகலப்பாக்குகிறது. ஒரே கலக்கல் தான்!!!!

Music : ஹாரிஸ் ஜெயராஜ்

ஹாரிஸ் ஜெயராஜ் இந்த முறையும் தனது முந்தைய மெட்டுகளை உல்டா பண்ணியிருக்கிறார். ஆனாலும் கேட்கும்படி உள்ளன பாடல்கள். குறிப்பாக

1. அழகே அழகே
2. வேணாம் மச்சான்
3. அகிலா அகிலா

இதுமட்டுமின்றி இவரது பின்னணி இசை படத்தினை மிகச்சிறப்பாக நகர்த்த உதவியிருக்கிறது.



விவேக் ஹர்சனின் படத்தொகுப்பு படத்தை தொய்வில்லாமல் நகர்த்தியிருக்கிறது.

பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு, எடிட்டிங் அனைத்தும் படத்துக்கு தேவையான அளவு கச்சிதமாக உள்ளன.

Director : இயக்குநர் ராஜேஷ்

வித்தியாசம், பரீட்சார்த்தம் என்ற பெயரில் எங்கும் முகம் சுளிக்காமல், சுவாரஸ்யம் குறையாமல் பார்க்கும்படியாக ஒரு படத்தைக் கொடுத்த இயக்குநர் ராஜேஷ் ஹாட்ரிக் அடித்திருக்கிறார். தொடர்க உங்கள் காமெடி படைப்புகள் !!!

ஒரு கல் ஒரு கண்ணாடி - ஒருமுறை என்ன… ஒன்ஸ்மோர் பார்க்கலாம்!



இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



நேர்முகத் தேர்வு வியூகங்கள்

நேர்முகத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் பற்றிய பகுப்பாய்வையும், அக்கேள்விகளுக்கான சரியான பதிலையும் தயார்செய்து வைத்துக்கொண்டு, நேர்முகத்தேர்வில் அவற்றை வழங்கினால் மட்டுமே, உங்களுக்கு வேலை கிடைத்துவிடும் என்ற முழு உத்தரவாதமில்லை.

இன்டர்வியூ என்பது அதனையும் தாண்டிய சில அம்சங்களைக் கொண்டது. நேர்முகத்தேர்வு நடத்துபவர்கள் முன்னிலையில், ஒரு நேர்மறை தொழில்முறை பிம்பத்தை நீங்கள் வெளிப்படுத்த வேண்டும். இந்த ஆளுமை வளர்ப்பானது, ஒரே நாளில் கைகூடிவிடாது. குறிப்பிட்ட காலகட்ட அளவில் பல்வேறு முயற்சிகளின் மூலமாகவே நீங்கள் அதனை வளர்த்துக்கொள்ள முடியும்.

அத்தகைய ஆளுமையை வளர்த்துக்கொள்வதற்கான சில ஆலோசனைகள் இங்கே வழங்கப்படுகின்றன.


முக்கியமாக 3 அம்சங்களை நேர்முகத்தேர்வை நடத்துபவர்கள் உங்களிடம் கவனிப்பார்கள்:
  • உங்களின் தோற்றம்

  • உங்களின் பேச்சு

  • உங்களின் நடத்தை
எனவே, இந்த 3 அம்சங்களையும் சிறப்பாக மேம்படுத்திக் கொள்வது, ஒரு மாணவருக்கு அவசியமானதாகும்.

பொலிவான தோற்றம்

நேருக்கு நேரான இன்டர்வியூ செயல்பாட்டில், உங்களின் தோற்றப் பொலிவு முக்கியமானது. அதற்காக, அழகாக இருப்பவர்களுக்குத்தான் பணி கிடைக்கும் என்று தவறாக புரிந்துகொள்ளக்கூடாது. ஷேவ் செய்து, சரியாக முடி திருத்தம் செய்து, நகங்களை வெட்டி, நேர்முகத் தேர்வுக்கு முன்பாக, முகத்தைக் கழுவி, ஒரு துடிப்பான தோற்றம் இருக்க வேண்டும் என்பதுதான் இதன் அர்த்தம்.

நல்ல ஆடை

Formal ஆடைகள், பொதுவாக, அனைத்துவகை நேர்முகத் தேர்வுகளுக்கும் பொருத்தமானவை. சில நிறுவனங்கள், ஆடை விஷயத்தில் அதிக முக்கியத்துவம் கொடுப்பவை. எனவே, முடிந்தால், ஒரு நிறுவனத்திற்கு இன்டர்வியூ செல்லும் முன்பாக, அந்நிறுவனத்தின் ஆடை விதிமுறைகள் பற்றி அறிய முயற்சி செய்யுங்கள். பொதுவாக, உங்களின் உடலுக்கேற்ற வகையிலும், நிறப் பொருத்தமாகவும் ஆடைகளை தேர்வுசெய்து அணியுங்கள். உங்களின் ஷ¤க்கள் நன்கு பாலிஷ் செய்யப்பட்டு இருக்கட்டும். நல்ல ஆடை என்றால் விலை உயர்ந்த ஆடைதான் என்றும் நினைத்துக்கொள்ள வேண்டாம்.

ஆயத்தமாதல்

நேர்முகத்தேர்வு என்பது பேஷன் ஷோ அல்லது திருமண நிகழ்ச்சி அல்லது அழகுக்கலை போட்டி இல்லை என்றாலும், உங்களை அந்தரீதியில் தயார்படுத்த வேண்டியது அவசியம். வாசனை திரவியத்தை பயன்படுத்துவது வரவேற்கத்தக்கது. உங்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால், நேர்முகத்தேர்வுக்கு முன்பாக அதை தவிருங்கள். வாய் நாற்றப் பிரச்சினை இருந்தால், அதற்கேற்ற Mouth freshner பயன்படுத்துங்கள்.

ரிலாக்ஸ் ப்ளீஸ்!

இன்டர்வியூ செல்வதை, போருக்கு செல்வதாக நினைத்து பயந்து, படபடத்து, உங்களை நீங்களே அழுத்திக் கொள்ளாதீர்கள். ரிலாக்சாக இருங்கள். அது ஒன்றும் மலையைத் தூக்கும் செயல் அல்ல. முதல் தினம் தொடங்கி உங்களின் இயல்பான வேலைகளை செய்து கொண்டிருங்கள். உறவினர்களிடமும், நண்பர்களிடமும் சாதாரணமாக பேசுங்கள். இன்டர்வியூ தினத்தன்று, உங்களுக்கு நன்றாக ஒத்துக்கொள்ளும் உணவினை மிதமாக அருந்திவிட்டு செல்லுங்கள். பழரசம் குடிப்பதும் நல்லது.

கவனமாக பேசுங்கள்

நேர்முகத்தேர்வில் பேசும்போது, எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்களின் முந்தையை நிறுவனத்தைப் பற்றி அவர்களிடம் குறைசொல்வதை தவிர்க்கவும். உங்களின் பேச்சை வைத்துதான் உங்களது ஆளுமையை அவர்கள் தீர்மானிப்பார்கள்.

நம்பிக்கையுடன் பேசுங்கள்

பேசும்போது பதற்றத்தில் தடுமாறாதீர்கள் மற்றும் குளறாதீர்கள். எதிரே இருப்பவர்கள் உங்களை எதுவும் செய்துவிட மாட்டார்கள். நீங்கள் வேலைதேடி வந்துள்ளீர்கள், அவ்வளவுதான். பேசும்போது, புன்முறுவலுடன் பேசுங்கள்.

நிதானமாக பேசுங்கள்

படபடவென்று பொரிந்து தள்ளிவிடாதீர்கள். அது அவர்களுக்கு புரியாமல் போகும் மற்றும் உங்களின் பலவீனத்தையும் இன்டர்வியூ நடத்துபவர்களிடம் காட்டிக் கொடுத்துவிடும். வாக்கியங்களுக்கு வாக்கியம் சில விநாடிகள் இடைவெளி இருந்தால் நல்லது.

விவாதம் செய்யாதீர்கள்

ஒரு குறிப்பிட்ட கருத்து அல்லது விஷயத்திற்காக இன்டர்வியூ நடத்துபவர்களிடம் எக்காரணம் கொண்டும் விவாதம் செய்துவிடாதீர்கள். உங்களின் எதிர்கருத்தை அந்த நேரத்தில் வெளிப்படுத்தாதீர்கள். அது இன்டர்வியூ நடத்துபவர்களுக்கு கோபத்தை வரவழைக்கலாம். அவர்களின் கருத்திற்கு மதிப்பளித்து, நேர்மறையாக பேசி உங்களின் வாய்ப்பினை அதிகப்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனம்.

ஆர்வமாக செயல்படுங்கள்

நேர்முகத்தேர்வு செயல்பாட்டில் ஆர்வம் என்பது மிகவும் முக்கியம். அவர்கள் கேட்கும் கேள்விகளை ஆர்வத்துடன் செவிமடுத்து, உங்களின் முகத்தை உற்சாகமாக வைத்துக்கொள்ள வேண்டும். உங்களின் ஆர்வமானது, அவர்களையும் உற்சாகப்படுத்தும். தகுதிகள் அதிகம் இருந்து, குறைந்த ஆர்வமுள்ளவர்களை விட, தகுதிகள் குறைவாக இருந்தாலும், ஆர்வம் அதிகமுள்ளவர்களுக்கே, நிறுவனங்கள் முக்கியத்துவம் கொடுக்கும் என்பதை மறக்க வேண்டாம்.

ஒவ்வொருவரின் கண்களையும், புன்முறுவலுடன் எதிர்கொண்டு, அவர்களின் கேள்விகளுக்கு உயிரோட்டமான முறையில் பதிலளிக்கவும்.

சிலர், நேர்முகத்தேர்வின்போது, எதையோ இழந்தவர்கள்போல முகத்தை சோர்வாகவும், உம்மென்றும் வைத்துக்கொண்டு இருப்பார்கள். அத்தகைய நபர்கள் நிச்சயம் நிராகரிக்கப்படுவார்கள்.

நேர்முகத்தேர்வு என்பது பரஸ்பரம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பானது. ஆர்வமும், துடிப்பும் இருந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.

Thanks : Dinamalar.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



இதயத்தை காக்கும் ஓட்ஸ் கட்லெட்!

சூடான சுவையான இதயத்தை காக்கும் ஓட்ஸ் கட்லெட் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.


தேவையானப் பொருட்கள்:-
  • ஓட்ஸ் - அரை கப்
  • பொட்டுகடலை மாவு - 2 - 3 தேக்கரண்டி
  • உருளைக்கிழங்கு - ஒன்று
  • பாலக்கீரை - சிறிது
  • இஞ்சி - சிறிது
  • வெங்காயம்- ஒன்று (சின்னது)
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - தேவையான அளவு
  • பச்சை மிளகாய் - ஒன்று

செய்முறை:-

  1. உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசித்து வைக்கவும். ஓட்ஸை வெறும் கடாயில் வறுக்கவும். கீரை, இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய் அனைத்தையும் பொடியாக நறுக்கவும்.

  2. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி சேர்த்து வதக்கவும்.

  3. வெங்காயம் வதங்கியதும் கீரை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

  4. கீரை வெந்ததும் தேவைக்கு ஏற்ற உப்பு சேர்த்து மசித்த உருளைக்கிழங்கும் சேர்த்து ஒரு நிமிடம் பிரட்டவும்.

  5. பின் வறுத்த ஓட்ஸ் சேர்த்து ஒரு நிமிடம் பிரட்டவும்.

  6. கலவை கலந்து வந்ததும் பொட்டுக்கடலை மாவு சேர்த்து நன்றாக பிரட்டி எடுக்கவும். லேசாக ஆறியதும் கையால் நன்றாக பிசைந்து வைக்கவும்.

  7. தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலவையை சிறு உருண்டைகளாக எடுத்து ஹார்ட் வடிவில் தட்டி போட்டு இரண்டு பக்கமும் திருப்பி போட்டு பொன் நிறமாக பொரித்து எடுக்கவும்.

  8. விரும்பிய வடிவில் கட்லட்டாக தட்டி போட்டு பொரிக்கலாம். சத்தான எண்ணெய் குறைவான மாலை நேர உணவு.

  9. விரும்பினால் இதில் துருவிய கேரட் கூட சேர்க்கலாம். பொட்டுகடலை மாவு அளவு பார்த்து சேர்க்கவும், கலவை உதிரவும் கூடாது, ஒட்டவும் கூடாது.

இதயத்தின் நலனை காக்க இது போன்ற உணவுப் பொருட்களை சமைத்து சாப்பிடுங்க, ஆரோக்கியமான இதயத்தை பெற்று நலமோடு வாழுங்க.

Source : Dinakaran
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



என்றும் இளமையாக இருக்க 20:20 டயட்

எட்டிப் பார்க்கும் வெள்ளை முடியை கறுப்பு மை பூசி மறைத்து வைப்பது ஆண்களின் வழக்கம்.
எப்போது வயதைக் கேட்டாலும் நான்கைந்து குறைத்தே சொல்வது பெண்களின் பழக்கம்.

இந்த வழக்கத்துக்கும் பழக்கத்துக்கும் ஒரே காரணம், 'இளமை' மனப்பான்மை. அது சரி... என்றும் இளமையாகவே இருக்க முடியுமா?

"யார் தடுத்தாலும் நில்லாமல் முன்னேறிச் செல்லும் ஜல்லிக்கட்டுக் காளைதான் வயசு. ஆனால், உணவுப் பழக்கம் என்கிற மூக்கணாங்கயிறு கொண்டு ஓரளவு உடலைக் கட்டுக்குலையாமல் வைக்கலாம்" என்கிறார்கள் உணவு நிபுணர்கள்.

"நேஷனல் இன்ஸ்ட்யூட் ஆஃப் நியூட்ரிஷன்" அளவீடுகளை மேற்கோள் காட்டி, இளமையை இழுத்துப் பிடிக்க 20 வழிகளைப் பட்டியலிடுகிறார், சென்னை பிங்க் ஃபிட்னஸ் ஸ்டூடியோ ஊட்டச்சத்து நிபுணர் ரிஸ்மியா முகைதீன்.

  1. மூன்று வேளை சாப்பாடு என்பதே பொதுவான நடைமுறை. இந்த 3 உணவுவேளைகளுக்கு இடையிலும் ஏதாவது சாப்பிட வேண்டும். சுண்டல், ஓட்ஸ், சாலட், ஜூஸ், மோர்... இப்படி! குறிப்பிட்ட இடைவெளியில் சாப்பிடுவதால் உடலின் வளர்சிதை மாற்றம் நல்லபடி நிகழும். ஆரோக்கியம் மேம்பட இது அவசியம்.

  2. காலை உணவை திருப்தியாகச் சாப்பிடலாம். மதியம் வயிறு முட்டச் சாப்பிட்டால் தேவையற்ற தூக்கம் வரும். இரவில் அதிகம் சாப்பிட்டாலோ தூக்கம் பாதிக்கப்படும். ஆண்களுக்கு தினம் 2425 கலோரியும் பெண்களுக்கு 1875 கலோரியும் அனுமதிக்கப்பட்ட அளவு.

  3. கார்போஹைட்ரேட் (50%), புரதம் (30%), கொழுப்பு (15%), வைட்டமின்கள், தாது உப்புகள் (5%)  இவையெல்லாம் அடங்கிய உணவே சரிவிகித உணவு. நமது டயட்டில் இவை அனைத்தும் இருக்க வேண்டும்.

  4. ஒருமுறை உணவை விழுங்க 15 முறை மெல்ல வேண்டும். நாம் பொதுவாக அதிகபட்சம் 7 முறையே மெல்லுகிறோம்.

  5. வாரம் ஒருமுறையாவது கீரை அவசியம். கீரையின் நார்ச்சத்துகள் கொழுப்பைக் கரைக்கின்றன.

  6. உடலின் இறந்த செல்களை நீக்கும் ஆன்டி ஆக்சிடன்ட் நிறைந்த காய் கனிகளை நிறைய சாப்பிட வேண்டும்.

  7. காலையில் வெறும் வயிற்றில் தண்ணீருடன் தேன் கலந்து சாப்பிடலாம். உடல் உஷ்ணமாக இருப்பவர்கள் ஊற வைத்த வெந்தயத்தை மென்று தண்ணீர் குடிக்கலாம்.

  8. தினமும் கைப்பிடியளவு பாதாம் அல்லது வேர்க்கடலை சாப்பிட வேண்டும். ‘பாதாம் நிறைய சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் கூடும்’ என்பது தவறான கருத்து. தினம் ஒரு பேரீச்சை சாப்பிடலாம்.

  9. மூன்று பேர் கொண்ட குடும்பத்துக்கு மாதம் ஒன்றரை லிட்டர் சமையல் எண்ணெய் போதும். நல்லெண்ணெய், கடலை எண்ணெய் என மாற்றி மாற்றி உபயோகிக்கலாம்.

  10. பாமாயில், வனஸ்பதி, நெய் போன்றவற்றைத் தவிர்ப்பது சிறந்தது. கொழுப்பு கூடுகிறது இவற்றால்.

  11. தவிர்க்கமுடியாவிட்டால், வாரம் இரண்டு நாள்கள் சிக்கன் எடுக்கலாம். எண்ணெயில் வறுப்பதைத் தவிர்த்து, குழம்பில் சேர்த்துச் சாப்பிடுவதே பெஸ்ட். இரவில் அசைவம் வேண்டாம்.

  12. மட்டன், பீஃப் வேண்டுமென்றால் மாதத்தில் ஒரு நாள் எடுத்துக் கொள்ளலாம்.

  13. சராசரி மனிதன் ஒருநாளைக்குக் குடிக்க வேண்டிய தண்ணீர் இரண்டரை லிட்டர்.

  14. சிறிய பங்களிப்புதான் என்றாலும் உப்பும் சர்க்கரையும் தேடாத நாக்கே இருக்க முடியாது. ஒரு நாளைக்கு ஒரு டீ ஸ்பூன் உப்பு மற்றும் 2 முதல் 3 டீஸ்பூன் சர்க்கரை என்பது ஆரோக்கிய அளவு.

  15. பேக் செய்யப்பட்ட உணவுப்பொருட்களைத் தவிர்க்கலாம். அவை கெட்டுப்போகாமலிருக்க எண்ணெயும் உப்பும் அதிகம் சேர்த்திருப்பார்கள்.

  16. தினமும் 2 கப் காபி பருகலாம். கிரீன் டீ குடிப்பது உடலுக்கு நல்லது.

  17. இரவில் படுக்கப்போகும் முன் சர்க்கரை சேர்க்காமல் ஒரு டம்ளர் பால் அருந்தலாம்.

  18. கொலஸ்ட்ராலைக் குறைத்து இதய நோயைத் தடுக்கும் ‘ஒமேகா 3 ஃபேட்டி அமிலம்’ மீன்களில் அதிகமுள்ளது. வாரம் இருமுறை சேர்க்கலாம்.

  19. குளிர்பானங்களை ஒதுக்குவது நல்லது. பழச்சாற்றில் அதிகம் தண்ணீர் சேர்த்துக் குடிக்கலாம்.

  20. உணவுப் பழக்கங்களால் வாயைக் கட்டிப் போட்டு வைத்தாலும், உடற்பயிற்சி மிகமிக முக்கியம். தினமும் ஒருமணி நேரமாவது அவசியம்.

Source : Dinakaran
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



காசேதான் கடவுளடா (1972)

முழுநீள நகைச்சுவைத் திரைப்படங்களை அவ்வளவு எளிதில் நம்மால் மறக்க முடியாது. 1972 ஆண்டு வெளிவந்த "காசேதான் கடவுளடா". எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காத படம்.


AVM நிறுவனம் தயாரித்த ஒரு முழு நீள நகைச்சுவையுடன் ஒரு நல்ல மெசேஜைத் தந்த படம் "காசேதான் கடவுளடா'. பணம் சேர்ப்பது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, அதைப் பாதுகாப்பதிலேயே கவனமாக இருந்தால்,சொந்தக்காரர்களே அதை அபகரிக்க முயலுவார்கள் என்ற கருத்தை சொல்லும் படம். இல்லை இல்லை பாடம்.

இதில் "நவரசத்திலகம்" முத்துராமன், லக்ஷ்மி, "தேங்காய்" சீனிவாசன், சுருளிராஜன், "ஆச்சி" மனோரமா, "வெண்ணிற ஆடை" மூர்த்தி, எம்.ஆர்.ஆர்.வாசு, ஸ்ரீகாந்த், "டைபிஸ்ட்" கோபு, "பக்கோடா" காதர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கதை வசனத்தை எழுதிய கோபு, டைரக்ஷன் பொறுப்பையும் ஏற்றிருந்தார். இசையமைப்பு மெல்லிசைமன்னர்" M.S.விஸ்வநாதன் அவர்கள்.

படத்துக்கு கதை வசனம் எழுதி துவக்கம் முதல் இறுதி வரை வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் விதமாக இயக்கி இருந்தார் கோபு. யாரையும் நம்பாத பணக்காரப் பெண்மணியாக மனோரமா, அவரது கணவராக வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோரமா கணவரின் மூத்த தாரத்து மகனாக முத்துராமன், அவரது உறவினராக ஸ்ரீகாந்த், அந்த வீட்டுக்கு வேலை தேடி வரும் பெண்ணாக லட்சுமி, முத்துராமனுக்கு தனது பைத்தியக்காரப் பெண்ணை மணமுடிக்க வந்து வீட்டில் டேரா அடிக்கும் எம்.ஆர்.ஆர்.வாசு, அவரது பைத்தியக்காரப் பெண்ணாக ரமாபிரபா ஆகியோர் சிறப்பாக நடித்திருந்தனர்.


கோடி, கோடியாகப் பணம் இருந்தும் மூக்குப் பொடிக்காக கண்டவர்களிடமும் 25 பைசா கேட்கும் பாத்திரத்தில் மூர்த்தியும், பணம் கிடைக்காத காரணத்தால் பாதாள அறையில் இருக்கும் பணத்தை அபகரிக்க முத்துராமனும், ஸ்ரீகாந்தும் போடும் திட்டங்களும், அதை நிறைவேற்ற டீக்கடைக்காரர் தேங்காய் சீனிவாசனை சாமியார் வேடத்தில் வீட்டுக்கு வரவழைத்து அவர்கள் அடிக்கும் லூட்டியும் சிரித்து, சிரித்து வயிற்றை வலிக்கச் செய்யும் நகைச்சுவையாகும்.

மெட்ராஸ் பாஷை பேசும் தேங்காய் சீனிவாசன், சாமியார் பாஷை பேசத் திணறுவதும், முத்துராமனும், ஸ்ரீகாந்தும் அதை எடுத்துக் கொடுப்பதும் சிறந்த காமெடி. மேலும் டைப்பிஸ்ட் கோபு, எஸ்.ராமாராவ், சுருளிராஜன், சசிகுமார், ஜெய்குமாரி எனப் பலரும் சிறப்பாக நடித்திருந்தனர்.


நடனமாட வைக்கும் பாடல்களைக் கவிஞர் கண்ணதாசன் எழுத, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவற்றுக்கு இனிமையான, அருமையான இசையை வடித்தார்.
"மெல்லப் பேசுங்கள் பிறர் கேட்கக்கூடாது
சொல்லித்தாருங்கள் யாரும் பார்க்கக்கூடாது'

"ஜம்புலிங்கமே ஜடாதரா ஜோதிலிங்கமே அரோகரா
வாயுலிங்கமே மகாதேவா பஞ்சலிங்கமே மகாதேவா'

"இன்று வந்த இந்த மயக்கம் என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா'

"ஆண்டவன் தொடங்கி ஆண்டிகள் வரையில் காசேதான் கடவுளடா
அடிபட்டு மிதிபட்டு தெரிஞ்சுக் கிட்டேன்டா காசேதான் கடவுளடா'
- ஆகிய இந்த அருமையான பாடல்களைப் படமாக்கியிருந்த விதம் அனைவரையும் கவர்ந்தது.

பெரிய நடிகர்கள் இல்லாமல் நகைச்சுவையை மட்டும் பிரதானமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட "காசேதான் கடவுளடா' படத்துக்கு ரசிகர்களின் பேராதரவு கிட்டத் தவறவில்லை. இப்போது பார்த்தாலும் தொய்வு இன்றி ரசித்து சிரிக்கவைக்கும் படம் "காசேதான் கடவுளடா'.

படத்தில் லட்சுமி ரொம்பவும் வெள்ளந்தியாகச் சொன்ன ஜோக்.

தே.சீனிவாசன்: "மங்களம்! மங்களம்!"

லட்சுமி: "சுவாமி ஏன் அடிக்கடி 'மங்களம் மங்களம்' என்று சொல்கிறார்?"

வெ.ஆ.மூர்த்தி & முத்துராமன்:"அதாவது மங்களம் உண்டாகட்டும் என்று சுவாமி சொல்கிறார்".

லட்சுமி: "அடுத்தவீட்டு மங்களம் ஏற்கனவே உண்டாகிட்டதாச் சொன்னாங்களே?"


தேங்காய் சீனிவாசனை எடுத்துக்கொண்டால் உடனே ஞாபகம் வருவது காசேதான் கடவுளடா படம்தான். முத்துராமனுடன் இவர் சாமியார் கெட்டப்பில் அடிக்கும் லூட்டிகள் அருமையானவை. 'அதே.. அதே..' என இவர் ஒவ்வொரு காட்சிக்கு சொல்வதும் அதிரடி சிரிப்பு.

தேங்காய் ரோலுக்கு முன் முத்துராமன் ரோலே சிறியதுதான்.

இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற "ஜம்புலிங்கமே ஜடாதரா.." என்ற பாடலைப் எங்கவாது பார்க்க நேரும்போது அடக்க முடியாத சிரிப்பு வந்துவிடும். வாலியின் கவிவண்ணத்தில் பாடல் அவ்வளவு சிரிப்பு.

க்ளைமேக்ஸ் நெருங்க நெருங்க... கலாட்டா அதிகமாகிக்கொண்டே போக, அனைவரும் நகைச்சுவையில் புரட்டி எடுத்தார்கள். வயிறுவலிக்க சிரித்துப்பார்த்த படமான இதுவும் என் ஃபேவரைட்.

கட்டாயம் இந்தத் திரைப்படத்தை முழுமையாக பாருங்கள். சிரிப்புக்கு 100% உத்திரவாதம் உண்டு.!!!

Thanks : பா.காசிவிஸ்வநாதன்
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



Related Posts with Thumbnails
 
back to top